முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி – நான்காம் நாள் நிகழ்வு

06 Jul 2026

முதலாமாண்டு மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சியின் நான்காம் நாள் நிகழ்வுகள் 06.07.2026 அன்று சிறப்பாக நடைபெற்றன.

முற்பகல் நிகழ்வுகள்:

விழாவின் முற்பகல் அமர்வில், தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி. செந்தாமரைச்செல்வி அவர்கள், மாணவர்கள் பெறக்கூடிய கல்வி உதவித்தொகைகள் குறித்தும், அவற்றைப்பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாகப் பேசினார். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சிறந்த திட்டங்களான 'தமிழ்ப்புதல்வன் திட்டம்', 'புதுமைப்பெண் திட்டம்' மற்றும் நலவாரியத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பெறக்கூடிய பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் குறித்துப் பேராசிரியர்கள் திரு. சந்திரசேகர், முனைவர் இளஞ்செழியன், முனைவர் அமுதவள்ளி ஆகியோர் மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கல்லூரியின் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுத் தொடக்க நிகழ்வில், எரியோடு காவல் நிலையச் சிறப்பு காவல் ஆய்வாளர்கள் திரு. பாலமுருகன், திரு. செல்வராஜ் மற்றும் தலைமைக்காவலர் திரு. வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள், விதிகளை மீறுவோருக்கான தண்டனைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவான விழிப்புணர்வு உரையாற்றினர்.

மேலும், சாலை பாதுகாப்பு மன்றத்தின் மற்றொரு நிகழ்வாக, ஆங்கிலத்துறை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குச் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பா. சந்திரசேகர் அவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்.

பிற்பகல் நிகழ்வுகள்:

நிகழ்ச்சியின் பிற்பகல் வேளையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திரு. பாலமுருகன் அவர்கள், சமூக நல விடுதிகளின் கட்டமைப்பு மற்றும் சிறப்புகள் குறித்து உரை நிகழ்த்தினார்.

நிறைவாக, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைப் பயிற்றுநர் செல்வி. சரோஜினி அவர்கள், மாணவர்களுக்கான அரசுப் பணிகள் குறித்தும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார்.

நிறைவுப் பகுதி:

நான்காம் நாள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி, விழாவின் நிறைவாக முனைவர். ஆர்.டி. நெல்சன் டேனியல் (Dr. RD. Nelson Daniel) அவர்கள் நன்றியுரை வழங்க, நான்காம் நாள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.